Pariyerum Perumal | பரியேறும் பெருமாள்
சரித்திரம் பல தலைவர்களை கண்டுள்ளது அவர்கள் எல்லாம் வெறுமனவே நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல. தொடர்ச்சியாக பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்டு ஒரு சுதந்திர வானில் இறக்கை விரித்து பறக்க காத்திருந்த ஒட்டுமொத்த சமூகமொன்றினதோ அல்லது நாடொன்றினதோ அடையாளமாக ஆவேசமாக அவர்கள் உருவாகுகின்றார்கள்.
வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அத்தனை அவமானங்களையும் ரணங்களையும் தாங்கி இழப்பதுக்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருக்கும் ஒருவனின் கோவம்தான் ஒரு புரட்சியின், சரித்திரம் எழுத காத்திருக்கும் ஒரு மலர்ச்சியின் விதை. ஆண்டாண்டு காலமாக நடந்து வருகின்றது என கொட்ட கொட்ட குனிந்து கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான நம்மில் எங்கேனும் ஒரு மூலையில் தான் அந்த சிறு தீப்பொறி பற்றுகின்றது. அந்த தீப்பொறியின் விம்பம்தான் பரியன். அவன் தலைவனாகவில்லை, புரட்சியை வெடிக்க வைக்கவில்லை ,சரித்திரத்தை மாற்றி எழுதவில்லை ஆனால் பல தலைமுறைகளால் சகித்துக்கொண்ட ஒன்றை எதிர்க்க துணிகின்றான்.,அவன் அவனாக இருக்க விரும்புகின்றான், மனிதனாக வாழ விரும்புகின்றான்.
'' சாதி '' இந்த ஒற்றை வார்த்தை பலருக்கு கௌரவம் ,சிலருக்கு இழிவு, நம் சாபக்கேடு , தலைமுறை போற்றும் ஒரு இருண்ட கலாச்சாரம் , அழிவின் ஆரம்பம் , மனிதம் இறக்கும் இடுகாடு, எத்தனை அறிவுரை சொன்னாலும் திருந்தாத அதை ஏற்க மறுக்கும் அடிமுட்டாள்கள் இருக்கும் வரை இந்த கொடுமைகள் எல்லாம் அரங்கேறும். ஆனால் அன்றாட வாழ்வில் நின்று பேச நேரமில்லாத நமக்கு ஏதோ ஒரு கிராமத்திலோ , தெருவிலோ நடக்கும் இந்த சாதி வெறியின் கோரமுகத்தை , அதன் வலியை , அடிப்படை வாழ்வின் தகுதி பறிக்கப்பட்ட வேதனையை பரியேறும் பெருமாள் கொஞ்சம் படம் பிடித்துக்காட்டுகின்றது.
இந்தப்படத்தில் , வேஷமிட்டு கூத்து கட்டுபவரின் மன நிலை , ஒருவரின் உடலமைப்பு , நடை உடை பாவனை அடிப்படையிலான கேலிகள் கிண்டல்கள் , ஆங்கில வழிக்கல்விமுறையும் அதை கடக்க செய்யும் பிரயத்தனமும் அதன்மூலம் சந்திக்கும் அவமானங்களும் , காதலும் அந்த காதல் சரிதானா தகுதியானதா என்ற மனநிலையும் , சாதியின் கௌரவக்கொலைகளும் பேசப்படுகின்றது. ஆனால் இவையெல்லாம் சாதியை அடிப்படையாய் வைத்தே வட்டமிடுகின்றன, ஒருவனின் தோளில் கைபோடுவதா இல்லை கழுத்தில் கை வைப்பதா என்பதையே சாதிதான் தீர்மானிக்கின்றது.
இந்த சாதியெனும் வட்டத்துக்குள் சிக்காதா நண்பன் ஆனந்தும் அவனன்பு கருப்பியும் , அவனை நேசிக்கும் ஜோவும் பரியனின் சொத்துக்கள். 'பரியன் ' ' ஜோ ' இருவரும் ஒரு உறவுக்குள் கட்டுப்படதா உன்னத ஜீவன்கள்.
" என் "ஜோ" ன்னா, அது காதலாக மட்டுமாத்தான் இருக்கனுமா? ஏன் அவ என் நல்ல Friend ஆ இருக்கக் கூடாதா? இல்ல என் செத்துப்போன கருப்பி நாயா இருக்கக்கூடாதா? சரி இதெல்லாம் விடுங்க,, எனக்குன்னு கொஞ்சூண்டு மிச்சமீதி இருக்குற என்னோட ஒரே ஒரு நம்பிக்கையா இருக்கக்கூடாதா? "
இந்த வரிகள்தான் அந்த எதார்த்தமான உறவு. அதை எம்மில் பலரால் உணரக்கூட முடிவதில்லை. பரியன் தன்னை சுற்றியிருக்கும் கையிற்றை அறுக்க முயல்கின்றான் , இந்த வெறியர்களிடம் இருந்து விலகி தனக்கேயான ஒரு சிறிய வாழ்வை வாழ துடிக்கின்றான்.
"சண்ட போட்டா போடட்டும், ரூம்ல போய் தூக்கு மாட்டி சாவுறத விட சண்ட போட்டு சாவட்டுமே
அவனுங்கள நம்மளால திருத்த முடியுமா ?
அப்புறம்..? இவன மட்டும் எதுக்கு அடக்க பாக்குறீங்க..? "
ஆம் பரியன் எதிர்த்து நிற்க தயாரானான். எதிர்ப்பதுதான் புரட்சியின் ஆரம்பம், அதை சண்டை என்றோ போராட்டம் என்றோ தகுந்தாற்போல கூறலாம்.
இவையெல்லாம் மாற வேண்டும் என்றால். நாம் மாற வேண்டும் சாதியை அடிப்படையாக கொண்ட மனநிலை மாறவேண்டும் அதுவரை தெருவுக்கு தெரு பரியன்கள் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
"நீங்க நீங்களா இருக்க வரைக்கும் ,நான் நாயா தான் இருக்கணும்னு நீங்க எதிர்பாக்கற வரைக்கும்,
இங்க எதுவுமே மாறது , இப்பிடியேதான் இருக்கும் "
பரியேறும் பெருமாள் - சமம் - By Luxshan
Comments
Post a Comment