சூப்பர் டீலக்ஸ் | Super Deluxe
உலகப்படங்களுக்கும் உள்ளூர் படங்களுக்குமுள்ள மிக முக்கிய வேறுபாடே உலக படங்கள் நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தத்துவங்களின் மேல் ஆழமாய் கீறலிட உள்ளுர் படங்கள் தத்துவங்களை தூக்கி பிடிப்பதோடு நின்று விடுகிறது. குறிப்பாய் கடந்த சில வருடங்களில் இந்தியப்படங்களும் பெரும் குழப்பத்தோடயே இயங்கி வரும் நம் சமூக இறையாண்மையின் முதுகினில் அழுந்த பிராண்ட தொடங்கியிருப்பது வரவேற்கபடவேண்டிய அம்சம். இதுவும் ஒரு உலகப்படமே.
ஆரண்ய காண்டம் படம் வந்தபோது அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் இன்று பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கான பால பாடங்களில் ஆரண்ய காண்டம் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு. கூடுதலாய் நேரம் எடுத்து கொண்டாலும் ஒரு படத்தின் அனைத்து துறைகளையும் மிக மிக நேர்த்தியாய் கையாண்டிருக்கும் இயக்குனர் தியாகராஜன்குமாரராஜா இந்தியாவில்
புறக்கணிக்கப்பட்டாலும்
உலக சினிமா மக்களால் கண்டிப்பாய் கவனிக்கபடவேண்டியவர்.
ஒரு அழகான வீடு சார், பாசமான அப்பா, அம்மா க்யூட்டா ஒரு தங்க நீங்க அந்த வீட்ல செல்ல பையன் இந்த ரக கிளீஷெக்களை உடைத்து முதல் சீனிலேயே தன் கள்ளகாதலுடன் ரைட் ஆன் டாப் பொஷிஷனில் உறவு கொள்ளும் பெண்ணோடு தொடங்குகிறது கதை. படத்தின் கதாபாத்திரங்கள் முரணுடனே அறிமுகமாகின்றன. படம் நான் லீனியர் பாணியில் பயணித்து கடைசியில் வாழ்க்கை வாழ்ந்து பார்க்க மட்டுமே என்கிற சித்தாந்ததோடு முடிகிறது.
படம் நெடுகிலும் வாழ்வின் ரகசியம் என்கிற போஸ்ட்டரும் ஒரு சாவி படமும் குறியீடாய் வந்து போகிறது. சமந்தா பகத் காட்சிகளில் பின் சீட்டில் பிணமிருக்க முன்பக்க டேஷ்போர்ட் மேல் தொங்கும் சாவியை படம் நெடுகிலும் அவர்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் குறியீடாய் காண்பித்திருப்பது அழகியல். படம் நெடுகிலும் கதாபாத்திரங்கள் பேசாதபோது சுற்றியுள்ள பாத்திரங்களும் இளையராஜா பாடல்களும் நிரப்புவது அவ்வளவு நேர்த்தி. விஜய் சேதுபதி நடிப்பை தூக்கி பிடிப்பதை விட அவர் மகனாக வரும் சிறுவன் விருதுக்கு உரியவன். பக்ஸ்ஸாக காமடி செய்த பாத்திரம் சிரித்தபடியே குரூரத்தை கொட்டுகிறது. மனித மனங்களின் குரூரத்திற்கு உருவம் கொடுத்தால் அது அந்த பெர்லின் பாத்திரம் போன்று இருக்கும். சீரியஸாய் முகத்தை வைத்துக்கொண்டு எங்க ஆரம்பிச்சுதுனு தெரில நாங்க மேட்டர் பண்ணிட்டோம் என கூலாக சொல்லும் சமந்தா, என் வீட்லயே வந்து என்னோட பொண்டாட்டியே என புலம்பும் பகத், கணவன் தன் கண் முன்னரே புடவையை கொசுவ கண்ணீரோடு பார்க்கும் காயத்ரி, எங்கு கில்மா பாடல்கள் போட்டாலும் நின்று ரசிக்கும் காஜி என்கிற அந்த இளைஞன், சந்தேகமே சாத்தானின் பல்லாக்கு என இறைஞ்சும் மிஷ்கின்.
மகனின் ஆபரேஷனுக்காய் டாக்டரிடம் மன்றாடும் ரம்யா, குறைவான நேரமே வந்தாலும் சிறப்பாய் செய்திருக்கும் இன்னும் சில பாத்திரங்களென ஒரு திறமையான இயக்குனரின் கை வண்ணம் படம் நெடுகிலும்.
படத்தை ஒலித்துல்லியம் மிக்க திரையரங்குகளில் மட்டுமே பார்க்க வற்புறுத்துவேன். நிறைய முக்கிய வசனங்கள் சன்ன ஒலியில் கவனிக்கப்படமாலே போய்விட சாத்தியமுண்டு. ஒரு வசனம் கூட அனாவசியமாய் துருத்திக்கொண்டு நிற்கவில்லை அவ்வளவு பாந்தம்.
"ஏம்ப்பா நீ இப்டி இருக்க? "
"நாம செருப்ப மாத்தி போடற மாதிரி சாமி என்ன மாத்தி போட்டுச்சு"
"சரியான சில்ற பையன் இந்த சாமி."
"ஒரு நாள் தாலிய கட்டிட்டு வாழ் நா முழுக்க என் தாலி அறுக்கறானே பாவி.. "
"இந்த படம் பாக்க ஆயிரம் பேர் இருக்கும்போது நடிக்க நாலு பேர் இருக்கமாட்டாங்களா"
"மச்சி சன்னி லியோனுக்கும் நம்மள மாதிரி பையன் இருப்பான்ல"
"ஆண்டவர் நம்ம பையன கைவிடலே அவன் உயிர கெட்டியா பிடிச்சுட்டிருக்காரு"
"அவர் ஏன் நம்ம பையன் உசுர பிடிச்சுட்டிருக்கனும் நம்ம கிட்டயே தந்துரலாமே."
யுவன் தேவையான இடத்தில் தேவையான இசை கொடுத்து நிறைய இடங்களில் தன் தந்தையை நிரப்பியிருப்பது முதிர்ச்சிக்கான அடையாளம். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கலை திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம்.
ஒண்டுகுடித்தனங்கள் அழுக்கு சுவர்கள் சன்னமான ஒளி குறிப்பாய் வி. சேதுபதி தன் மகனை தொலைக்கும் அந்த அங்காடி சந்து ஒரு அரவாணியின் புலம்பலை சட்டை செய்யாமல் சுழலும் அனைத்து தரப்பு மக்களென நேர்த்தியான காட்சி அமைப்பிற்கு ஒளியும் கலையும் அவ்வளவு வலு சேர்த்திருக்கிறது.
பரந்துப்பட்ட பெரிய பிரபஞ்சத்தில் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய பூமியில் நாம் கொண்டுள்ள கொள்கைகள் சித்தாந்தங்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை வரும் ஒரு ஏலியன் பாத்திரம் மூலமாய் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் மனிதனின் வாழ்வில் ஏற்ப்படுத்தும் நிகழ்வுகளை நாம் எப்படியெல்லாம் நமக்கேற்ற நம்பிக்கைகள் மற்றும் சித்தாந்தத்தின் மூலமாய் பார்க்கிறோம் என முகத்திலறைந்து சொல்கிறது படம். படத்தில் மனுஷ்ய புத்திரன் சொல்வது போல இந்த அபத்தமான வாழ்வை இதே மகத்தான வாழ்வு கொண்டுதான் வாழ்ந்து பார்க்க வேண்டும்.
படம் நெடுகிலும் வசனங்கள் யதார்த்தமாய் வந்து போகிறது உங்கள் மகன் மகளோடு சென்று பார்க்கும் பட்சத்தில் உங்களால்தான்
அவர்களுக்கு தர்ம சங்கடம் மிச்சபடி சில விஷயங்களில் அவர்களின் அறிவு முதிர்ச்சி நம்மைவிட அதிகம்.
குமாரராஜா அடுத்த படம் எப்போது தருவார் எனத்தெரியாது .அதுவரை நாம் காத்திருப்போம் இது போன்றோ இதைவிட இன்னுங்கூட நேர்த்தியாய் ஒரு படம் தர அவர் எடுக்க வேண்டிய தேவையான அவகாசமே அது.
இடைப்பட்ட காலத்தை இட்டு நிரப்ப இருக்கவே இருக்கிறார்களே சிறுத்தை சிவா, ஹரி, சங்கர் etc
Comments
Post a Comment