ஆட்ட நாயகன் விருது மாணவிக்கு அர்ப்பணம். .!

ஆட்ட நாயகன் விருது மாணவிக்கு அர்ப்பணம்; பெருந்தன்மையுடன் யுவராஜ்சிங் அறிவித்தார். .!

                                          புனே: புதுடில்லியில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு தனது ஆட்ட நாயகன் விருதை அர்ப்பணிப்பதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் அறிவித்துள்ளார். இந்த மாணவி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார், இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பழிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பார்லி.,யில் எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று டில்லியில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவி தற்போது உடல் நலம் முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 



நேற்று இங்கிலாந்துக்கு எதிரான டுவன்டி 20 போட்டியில் ஆல்ரவுண்டராக அசத்தினார் யுவராஜ்சிங். இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற யுவராஜ்சிங், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இந்த ஆட்டம் முடிந்து நிருபர்களிடம் பேசிய யுவராஜ்சிங்: டில்லியில் கற்பழிக்ககப்பட்ட மாணவி குறித்து செய்திகள் மூலம் மிக கவலையுற்றேன். இப்போது அந்த மாணவியின் நிலை எப்படி இருக்கிறது என்று என்னால் அறியமுடியவில்லை. இவர் போராடிய நிலை மிக மோசமானது. இது எனது மனதை மிகவும் பாதித்துள்ளது. எனது அணி முழுவதும் ஆழ்ந்த கவலையுற்றனர். இந்த மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் எனது ஆட்ட நாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

Comments