Action Hero Biju | Suraj Venjaramoodu Scene

'ஆக்ஷன் ஹீரோ பிஜு' படத்தில் ஒரு காட்சி.


தனது மனைவியையும் மகளையும் தன்னிடம் சேர்த்து வைக்கும்படி உருக்கமாக கெஞ்சும் ஒரு கணவன், அவனுடன் வாழப்பிடிக்காத மனைவி இவர்களுக்கு இடையேயான பஞ்சாயத்து ஒன்று உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் பிஜுவிடம் (நிவின்பாலி) வருகிறது.
சம்பந்தப்பட்ட கணவன் மனைவி மற்றும் அவர்களது ஐந்து வயது மகள் இவர்களோடு கூடவே இன்னொரு நபரும் காவல் நிலையத்திற்கு வருகிறான். முதலில் மனைவி மட்டும் தனியாக விசாரிக்கப்படுகிறாள்.
'குடிச்சிட்டு அடிக்கிறானா? வேற பொண்ணு கூட அவனுக்கு ஏதாவது தொடர்பிருக்கா? சரியா வேலைக்கு போகமாட்டேங்குறானா?!' போன்ற அடுத்தடுத்த கேள்விகளுக்கு அவளிடமிருந்து இல்லையென்றே பதில் வருகிறது.
'அப்ப எதுக்காக அவனோட வாழப்பிடிக்கல?' என்கிறான் பிஜூ. "அவருக்கும் எனக்கும் ஒத்துவராது.. நான் வேற ஒருத்தர விரும்பறேன்!" என்று அவர்களோடு உடன் வந்து ஜன்னலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் அந்த இன்னொரு நபரை அர்த்தத்தோடு பார்க்கிறாள். பிஜூ ஏதோ புரிந்தவனாக அவனது கணவனையும் காதலனையும் அழைக்கிறான்.
"அவளுக்கு என்னிடம் வாழப்பிடிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. அவனோடே அவள் போகட்டும். ஆனால் எனது ஆசை மகளையாவது என்னிடம் ஒப்படைத்துவிடச் சொல்லுங்கள்! அவளில்லாம் என்னால் வாழமுடியாது!" என்று கெஞ்சுகிறான் கணவன்.
நடந்த மொத்தத்தையும் பார்த்த பிஜு ஒரு முடிவுக்கு வந்தவனாய் 'சரி.. உங்களால் இருவரால் இனி ஒன்றாய் வாழமுடியாது. அவள் அவனோடு காதலில் இருக்கிறாள். இனி மகள் திங்கள் முதல் வெள்ளி வரை தாயிடமும் சனி ஞாயிறுகளில் தந்தையிடமும் இருக்கட்டும்!' என்கிறான். ஆனால் நெஞ்சத்தில் கொஞ்சமும் ஈவு இரக்கமே இல்லாத மனைவி அதற்கும் சம்மதிக்க மறுக்கிறாள்.
நிதானமிழந்த கணவன் 'என் மகள் எனக்கு வேண்டும். அவளுக்காக எந்தவொரு எல்லைக்கும் போவேன்.. இழப்பதற்கு இனி என்னிடம் ஒன்றுமில்லை!' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
'என் மகளுக்கு தந்தை இவரில்லை.. அவர்!' என்று தனது காதலனைக் கை காட்டுகிறாள்.
அதைக் கேட்ட கணவன் துயரத்தின் உச்சத்திற்கே போய் உடைந்து அழத்துவங்குகிறான். ஒரு முடிவுக்கு வந்தவனாக தாரை தாரையாகக் கண்ணீருடன் மகளை அள்ளி வாஞ்சையோடு கட்டித்தழுவி கடைசியாக உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்துவிட்டு 'என்னோடு போகட்டும். இனி வேறு யாரையும் இதுபோல தயவுசெய்து ஏமாற்றாதே!' என்று சொல்லிவிட்டு கனத்த மனதுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான்.
கணவனாக நடித்திருந்த சுராஜ் மிகவும் உருக்கமாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு மட்டுமே நான் இத்தனை பாராக்கள் எழுதுவதற்கு காரணம். படத்தை பார்த்துக்கொண்டிருந்தவன் எழுதவேண்டி நிறுத்தியும் விட்டேன்.
ஒரு ஐந்து வருடங்களுக்கு தன்னுடைய மகள்தான் என்று நினைத்து பாசத்தைக் கொட்டிக் கொட்டி வளர்த்த ஒரு குழந்தையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு 'இனி அவள் உனக்கில்லை!' என்றால் எப்படி இருக்கும்!! அப்படிப்பட்ட ஒரு அப்பாவாக தத்ரூபமாக வாழ்ந்து காட்டியிருந்தார் அவர்.
தந்தைகளின் அன்பை சாதாரணமாக எடைபோட்டுவிடவே முடியாது. மிகவும் உன்னதமானது அது. வெளியில் அவ்வளவாக அது தெரியாது. உள்ளுக்குள் விரவிக்கிடக்கும். வெடிக்கும்போது எரிமலையாக வெடிக்கும்
நடந்த அனைத்தையும் பார்த்து என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப்போன பிஜு அந்தக் காதலனை அருகே அழைக்கிறான். "உண்மையிலேயே நீதான் அந்தக் குழந்தைக்கு தகப்பனா!" என்று கேட்கிறான். "ஆமாம்!" என்று அந்த தப்புக்கான எந்தவித குற்ற உணர்ச்சியும் கொஞ்சமும் இல்லாமல் சொல்கிறான்.
அவன் சொல்லிமுடிக்கும் அடுத்த வினாடி "அஞ்சு வருஷம் குழந்தை அவர்கிட்ட வளர்ற வரைக்கும் மயிறாடா புடுங்கிட்டு இருந்த!" என்று சொல்லி கன்னத்தின் ஓங்கி ஒரு அறை. "என் கண்ணு முன்னாடி நிக்காத.. வெளிய போடி!" என்று பிஜூ அவளைப்பார்த்து வெறிகொண்டு கத்துவதோடு அந்தக்காட்சி முடிகிறது.
இந்த குறிப்பிட்ட காட்சி என்னைத் தொடர்ச்சியாக ஏதோ செய்துகொண்டே இருக்கிறது.
'அது இவருக்கு பொறக்கலை'னு அவள் சொன்னதும், உடைந்த குரலில் 
அந்த கணவன் இறுதியில் போகும்போது சொல்லும்
"சும்மா ஏமாத்துறதுக்காக சொல்றா சார்... 
ஆனாலும். .
ஏமாத்துறதுக்காக என்றாலும் கூட இப்டி எல்லாம் சொல்ல வேண்டாம்னு சொல்லுங்க சார்.. நான் வர்றேன் சார்"

Comments