Uriyadi | உறியடி


#1YearOfUriyadi - உறியடியை ரசித்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கு இந்த பதிவு. உங்கள் நட்பு வட்டத்தில் படம் பிடித்தவர்களுக்கும், நன்றி தெரிவிக்கும் இப்பதிவை பகிர வேண்டுகிறேன்.
"Of all the arts," Vladimir Lenin said, "for us, the cinema is the most important.”
கலைகளில் மிக முக்கியாமனது சினிமா - விளாதிமிர் லெனின்
4.5 வருட உழைப்பும், 1 வருட காத்திருப்பும், ஒட்டு மொத்த குடும்பத்தின் வாழ் நாள் சேமிப்பையும் விலையாக கொடுத்த பின், கடந்த 27.05.2016 திரைக்கு வந்து 35 நாட்கள் திரையரங்கிலும், இன்று வரை பல மடிக்கணினி/அலைப்பேசிகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது உறியடி. இந்த படம், திரையரங்கில் இன்னும் பெரிய வெற்றியடைந்திருக்க வேண்டும், அதற்கான அத்தனை விஷயங்களும் படத்தில் இருந்தன, என்கிற ஆதங்கத்தை நிறைய நண்பர்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர். இன்னும் சில சொந்தக்காரர்கள் மற்றும் "நல விரும்பிகள்", எதெல்லாம் படத்தில் இல்லாததால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கவில்லை என நடந்த நிஜ விவரம் தெரியாமல், இலவச அட்வைஸ் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நாம் எல்லோரும் அறிந்த படி, பெரிய நடிகர்கள்/இயக்குனர்/தயாரிப்பு கம்பெனி பெயர் இல்லாவிடினும், நல்ல தரமான படத்தை திரையரங்கு வந்து பார்ப்பதற்கென ஒரு குறிப்பிடத்தக்க சதவிகித மக்கள் உள்ளனர். ஒரு சிறிய பட்ஜெட் படத்தை வணிக ரீதியாக வெற்றியடைய செய்ய இவர்கள் திரையரங்கு வந்து பார்த்தால் போதுமானது. ஆனால் படம் பார்த்தவர்களின் வாய் வழி வார்த்தை அவர்கள் அனைவரையும் சென்றடையும் வரை, படம் திரையரங்கிலிருந்து தூக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு, இந்த திரையரங்கில் இந்த படம் ஓடுகிறது என மக்களுக்கு தெரிகிற அளவு விளம்பரங்கள் கொடுத்தாக வேண்டும். அது உறியடிக்கு நடக்கவில்லை. இப்படி ஒரு படம் வந்ததே ரிலீஸ் ஆன போது தெரியவில்லை என நிறைய பேர் ஆன்லைனில் எழுதவதை பார்த்திருப்பீர்கள். போதுமான அளவு Publicity அமையாததாலேயே உறியடிக்கு திரையரங்கில் பெரிய வெற்றி கிட்டவில்லை. ஆனால், கடந்த ஒரு வருடமாக படம் பல வழிகளில் பெரிய அளவில் மக்களிடம் சென்றடைந்து விட்டது. ஒரு சூப்பர் ஹிட் ஆன படத்தை எத்தனை பேர் விரும்பி பார்த்திருப்பார்களோ, அத்தனை பேர் உறியடியையும் பார்த்து ரசித்தார்கள் என்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. இன்று வரை டவுன்லோட் செய்து பார்த்து எழுதப்படும் பாராட்டுகளே(கிராமம், நகரம், வெளி நாடு என அனைத்து தரப்பிலிருந்தும்) அதற்கு சாட்சி. Tentkotta எனும் காசு கொடுத்து படம் பார்க்கும் இணையதளத்தில், அதிக முறை பார்க்கபட்ட அறிமுக இயக்குனரின் படம் என்ற விருது வழங்கப்பட்டது மற்றுமொரு சாட்சி. ஒரு படத்தை நிறைய பேர் பார்த்து, ரசித்து பாரட்டுவது வெற்றி என கூறுவது சரி என்றால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறியடியை மக்கள் வெற்றி படமாக்கியிருக்கிறார்கள்.
சாதிய அரசியலை பேசாமலிருந்திருந்தால் பெரிய நிருவனங்கள் கூட முன்வந்து இப்படத்தை நல்லபடியாக ரிலீஸ் செய்திருக்கும். ஆனால் யாரையும் குறை கூறுவது முறை ஆகாது. நமது சமுதாய அமைப்பு அப்படி.
ஒன்றிருவரை தவிர அத்தனை நடிகர்களும், உதவி இயக்குனர்களும், டெக்னீஷியன்களும் உறியடியில் அறிமுக படுத்தபட்டவர்களே. வாய்ப்பு தேடி பொருளாதார ரீதியாக கஷ்டபடுபவர்களில் ஒரு சிலரின் கனவு நிறைவேற இந்த படம் காரணமாக அமைய பெற்றதில் மகிழ்ச்சி.
எந்த பெரிய பின்னணியும் இல்லாத ஒரு சாமானியனின் படைப்புக்கு எல்லா மேடைகளும், மரியாதைகளும் கிடைத்து விடாது. அதில் சுய விளம்பர அரசியல் ஆயிரம் உள்ளது. அரசியலை விஞ்சும் அரசியல் அது என புரிந்தது. ஆனாலும், நிறைய மரியாதைகள் உறியடிக்கு வாய்க்க பெற்றது. தேர்தலில் பெரிய கட்சிகளுக்கு மத்தியில் காணாமல் போகும் நல்ல சுயேட்சை வேட்பாளர் போல காணாமல் போயிருக்க வேண்டிய படத்திற்கு, மக்களால் பெரிய அங்கீகாரம் கிடைக்க பெற்றிருக்கிறது.
என் தனி ஒருவனின் சினிமா ஆர்வத்திற்காக 6 வருடங்களுக்கும் மேலாக வாழ்க்கை முறையை மாற்றி கொண்டு கஷ்டங்களை ஜீரணிக்கும் என் குடும்பத்திற்கும், படம் ஆரம்பத்ததில் தொடங்கி ரிலீஸ் வரை கூடவே இருந்த உதவி இயக்குனர் ஜீவரத்தினத்திர்க்கும், படத்தில் சுரேஷ், அகிலன் கதாபாத்திரங்களின் inspiration ஆன என் நிஜ கல்லூரி நண்பர்கள் சரவணன், பழனிசாமி & காமராஜ் குமாருக்கும் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்.
இப்படத்திற்காக ஓய்வில்லாமல் எழுத்து, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு, பின்னணி இசை, எடிட்டிங் (இருதிக்கு முந்தின வெர்ஷன்) என உழைத்ததிலும், அதை நல்லபடியாக ரிலீஸ் செய்ய முயற்சித்ததில் எதிர்கொண்ட நியாமற்ற மன உளைச்சலாலும், என் ஆயுளில் சில வருடங்களாவது குறைந்திருந்தால் ஆச்சர்யமேதுமில்லை. ஆனால் உழைப்பு மட்டுமே எங்களுடையது. வெற்றி நீங்கள் கொடுத்தது. அளவு கோல் பாராமல் அன்பை வாரி இரைத்த மக்களுக்கு நன்றி சொல்வதை தவிர வேறேதும் செய்வதறியேன்.
தன் சொந்த படம் போல் கருதி, தன் நட்பு வட்டத்தில் உள்ளவர்களையும் படம் பார்க்க வைத்து விட வேண்டுமென எண்ணிய, எழுதிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் எந்நாளும்.
உறியடி கடந்து வந்த பாதையும், படத்தின் தரத்திற்கு சான்றாய் கிடைத்த சில பாராட்டுகளும், இந்த காணொளி பதிவில் (Courteosy: உதவி இயக்குனர், ரசிர்கள்) :

Comments