தனிமை | Alone


தனிமை என்பதென்ன
நான்கு சுவர்களுக்குள்
தனித்த காற்றின் கரங்களுக்குள்
அகப்பட்டிருப்பதா
பூச்சிகளின் ரீங்காரம்
கொண்டுதெறிக்கும்
அடர்பச்சை காட்டில்
கைவிடப்பட்டிருப்பதா
ஆயிரம் தெய்வங்கள்
அன்னையரோடு
வீற்றிருக்கும்
கோவில்களில்
எங்கனம் கிட்டக்கூடும்
நிஜமுகங்கள் கடந்து
அதில் நூறு முகங்களில்
முகமூடிகள் தரித்த
சுயநலமுகங்கள் சூழந்து மொய்க்கும்
இவ்வுலகத்திலெங்குண்டு
அர்த்தஜாமத்தின்
காரிருள் பேரிறைச்சலில்
ஆந்தைகள் அலறி
சென்றெதிரொலிக்கும்
நெடுஞ்சுவர் வரை
எங்குமில்லை
அது
கண்டது கேட்டது
உண்டது உறங்கியது
புணர்ந்துணர்ததென
அனைத்து
ஞாபக கிளறிகளும்
என் மனத்துப் ப்ராயங்களைத்
துரத்திக் கொண்டிருக்க
இனி
எங்கே தேடுவேன்
நான் மட்டுமேயான
என் ஆழ்மனமுறங்கும்
அத் தனிமையை

Comments