கபாலி | தனிமையின் வலி


பிரிவென்பதை எந்த நேசமும் விரும்புவதில்லை. பிரியப்போகின்றோம் என்பதை உணர்ந்து எந்த உறவும் அன்பை காட்டுவதில்லை. நொடி, நாழிகை, நாட்கள், வருடம் என அந்த அன்பின் நெருக்கம் அதிகரிக்கும் அதேவேளை பிரிவிற்கான தாளாமையும் கூடத்தான் செய்கின்றது.
கபாலி திரைப்படத்தில் 'மாயநதி' பாடல் பிரிந்திருந்த காதலின் ஊற்றெடுத்த பிரவாகம் எனில் 'வானம் பார்த்தேன்' பாடல் அந்த பிரிவின் வலிகூடிய நதியோட்டமே. நம்மை விட்டு நம் அன்பானவர் பிரிந்து சென்றாலே அந்த வலி எம்மை தினம் கொன்று புதைக்கும். ஆனால் இங்கு கபாலிக்கு அவனன்பு குமுதவள்ளி இறக்கவில்லை இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் அவளும் தன்னைப்போல தனிமையில் தவித்துக்கொண்டு இருக்கின்றாள் என்பதை அறிந்து அவளை தேடி அலையும் பெருந்துயர் கொடிது. நாம் தொலைத்த அன்பை திக்கு தெரியாமல் தேடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.
// தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு
நான் வாழ்வதோ
தீராத காயம்
மனதில் உன்னாலடி
ஆறாதடி //

நம் எல்லோரினதும் பெரும் தேடல் உயிருள்ளவரை கூடவே இருக்கும் ஒரு நேசம் தான். அப்படியான ஒரு உறவு வாழ்வின் பெரும்வரம். அவர்களே வாழ்வென ஆகிவிடுவார்கள். அப்படி தன் வாழ்வே குமுதவள்ளி என கண்டறிந்த கபாலி அவளை அவனது மூச்சுக்காற்றாகவே பார்க்கின்றான். தனிமையில் அவன் படும் அவஸ்தை அவள் பிரிந்து தந்து சென்ற காயம். அந்த இருபத்தைந்து வருட காயத்தை ஆற்ற அவளால் மட்டுமே முடியும்.
// இடப் பக்கம் துடித்திடும்
இருதய இசையென இருந்தவள்
அவள் எங்கு போனாளோ //

மூச்சுக்காற்றை போலத்தான் இருதயமும். இரண்டுமின்றி வாழ்வது சாத்தியமற்றது அப்படி அவனுக்குள் இசைத்த இருதய துடிப்பு நின்றுபோனதை எண்ணி கபாலி தினமும் தன் வாழ்வின் வெறுமையை எண்ணி நொடிந்துருகின்றான் என்பதை பிரதீப்பின் குரல் சொல்லும்.
// இரு விழி இமை
சேராமல் உறங்கிட மடி
கேட்கிறேன் மழையினை
கண் காணாமல் மேகம் பாா்த்து
பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை
தேடும் நிஜம் ஆனேனடி //

நாம் உருகி உருகி காதலித்த ஒருவரின் பிரிவை தாங்கி சாதாரண வாழ்வை கொண்டு செல்லும் அளவுக்கு நாம் யாரும் திண்மப்படவில்லை. அதற்கு கபாலி மட்டும் என்ன விதி விலக்கா?
எத்தனை இரவுகள் உறக்கம் தொலைத்தவனாய் அவள் மடி தேடியிருப்பான்
பார்க்கும் இடமெல்லாம் அவள் முகம் கண்டிருப்பான்
தனித்த அறையிலே அவள் குரல் கேட்டிருப்பான்
நிஜத்தில் ஒரு நிழலை தேடி அலையும் பித்தன்போல வாழ்ந்திருப்பான் ஏனெனில் பிரிவென்பது சாவிலும் கொடிது.

// எங்கும் பாா்த்தேன்
உந்தன் பிம்பம் கனவிலும்
நினைவிலும் தினம் தினம்
வருபவள் எதிாினில்
இனி வர நேராதோ

தூண்டில் முள்ளில் மாட்டிக்
கொண்ட மீன் நானடி ஏமாறும்
காலம் இனிமேல் வேணாமடி கை சேரடி //

பிரிந்திருந்தும் கபாலியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் குமுதவள்ளி என்றுமே நிஜம். கனவில் தினம் அவள் அவன் மார்பில் சாய்ந்துகொண்டு இருக்கின்றாள், அவன் துவளும் போதெல்லாம் அவனின் தலை வருடுகின்றாள் அப்படியான கனவினை அவன் வாழ்வில் மீண்டும் நிஜமாக காண துடிக்கின்றான். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் இந்த கனவு வாழ்க்கையில் ஏமாந்தது போதும் என்னை வந்து சேர்ந்திடு என்பதுதான் கபாலியின் ஒட்டுமொத்த வாழ்வின் ஒரே ஆசை.
இந்தப்பாடல் மனதை ரொம்பவே பாதிக்கும். பிரதீப்பின் குரலும் சந்தோஷின் இசையும் சேர்ந்து அந்த பிரிவுத்துயரை அப்படியே மனசுல தூவி விட்டிடும். நீங்கள் மிகவும் நேசித்த ஒருவரை பிரிந்த வலியை உணர்ந்துள்ளீர்களா வானம் பார்த்தேன் பாடல் தான் அந்த உணர்வு 💔

Comments